இசுரேலின் தொடர் தாக்குதலால் காசாவின் இரண்டு பெரிய மருத்துவமனைகள் தங்களது செயல்பாட்டை நிறுத்தியுள்ளன. ஆனால், அந்த குற்றச்சாட்டை இசுரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மறுத்துள்ளார். இசுரேல் - கமாசு இடையிலான போர் ஒரு மாதத்தை கடந்து நடைபெற்று வருகிறது. ஆரம்பத்தில் வான்வழித் தாக்குதலை நடத்தி வந்த இஸ்ரேல் ராணுவம், தற்போது காசாவை நான்கு புறங்களிலும் சுற்றி வளைத்து தரைவழித் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. கமாசு குழுவினரை அழிக்காமல் ஓயப்போவதில்லை எனக் கூறி இசுரேல் கடும் தாக்குதலை நடத்தி வரும் நிலையில், அந்த தாக்குதலில் அப்பாவி மக்கள்தான் அதிகமாக பலியாவதாக ஐ.நா. சபை மற்றும் பிரான்சு, அரபு நாடுகள் உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் கவலை தெரிவித்துள்ளன. இதனிடையே, காசாவின் மிகப்பெரிய மருத்துவமனைகளில் ஒன்றான அல் ஷிபாவை குறிவைத்து இசுரேல் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. அந்த மருத்துவமனையை ஹமாஸ் குழுவினர் தங்கள் மறைவிடமாக பயன்படுத்தி வருவதாக, தொடக்கம் முதலே குற்றஞ்சாட்டி வரும் இசுரேல், குண்டுகளை வீசியும், துப்பாக்கியால் சுட்டும் தாக்குதலை தொடர்கிறது. இதனால், மருத்துவமனையில் முழுமையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டிருப்பதோடு, குடிநீர், உணவு மற்றும் அத்தியாவசிய மருந்துகள் கூட தீர்ந்துவிடும் நிலை இருப்பதாக கூறப்படுகிறது. அல்சிபா மருத்துவமனை வளாகத்தில் நோயாளிகள், தஞ்சமடைந்தவர்கள் என 15 ,000-க்கும் மேற்பட்டோர் இருக்கும் நிலையில், அவர்கள் அனைவரும் பலியாகி விடுவார்கள் என மருத்துவமனை நிர்வாகம் கவலை தெரிவித்துள்ளது. எரிபொருளும் தீர்ந்து கொண்டே வருவதால், ஏற்கெனவே வெண்டிலேட்டரில் இருந்த குழந்தை உள்பட 2 பேர் பலியாகிவிட்டனர். மேலும், அண்மையில் புதிதாக பிறந்த 37 பச்சிளங்குழந்தைகள் பலியாகும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக, மருத்துவர்கள் கூறியுள்ளனர். போருக்கு பிறகு அல்சிபா மருத்துவமனையில் மட்டும் 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பிறந்திருந்தாலும், குறைந்த எடை, சத்துக்குறைபாடு உள்ளிட்ட பிரச்சனைகளுடன் பிறந்த 37 குழந்தைகள், வெண்டிலேட்டரில் வைக்கப்பட்டுள்ளன. அந்த குழந்தைகளின் நிலை தற்போது கவலையை ஏற்படுத்தியுள்ளது. மேலும், மருத்துவமனையை விட்டு வெளியே வந்தாலே, இசுரேலின் தாக்குதலில் கொல்லப்படும் சூழல் இருப்பதால், மருத்துவமனையில் உயிரிழந்த 100-க்கும் மேற்பட்டோரின் சடலங்கள் அந்த வளாகத்தினுள்ளேயே குழிதோண்டி புதைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், அல் ஷிபா மருத்துவமனை நிர்வாகத்துடன் தங்களது தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக கவலை தெரிவித்துள்ள உலக சுகாதார நிறுவனம், உயிருக்கு போராடும் நோயாளிகளை காப்பாற்ற நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. இதனிடையே, மற்றொரு பெரிய மருத்துவமனையான அல் குத்ஸ் மருத்துவமனையிலும் எரிபொருள் தீர்ந்துவிட்டதால், செயல்பாடுகள் நிறுத்தப்பட்டுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மின்சாரம் முழுமையாக துண்டிக்கப்பட்டிருப்பதோடு, மருத்துவமனைகளை குறிவைத்தே இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்துவதால், இனி அல் குத்ஸ் மருத்துவமனையும் செயல்பட வாய்ப்பில்லை என சுகாதார வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், மருத்துவமனைகளை தாங்கள் குறிவைக்கவில்லை எனக் கூறி, இசுரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளார். மேலும், அல் சிபா மருத்துவமனைக்கு தேவையான எரிபொருள் உள்ளிட்ட அனைத்து உதவிகளும் வழங்கப்படுவதாகவும், மருத்துவமனைகள் மீது கமாசு அமைப்பினர்தான் தாக்குதல் நடத்தியதாகவும் நெதன்யாகு குற்றஞ்சாட்டியுள்ளார். ஆனால், அல் சிபா மருத்துவமனை மீதான இசுரேலின் தாக்குதலை கண்டித்து, பிணைக்கைதிகளை விடுவிப்பது தொடர்பான பேச்சுவார்த்தையை நிறுத்துவதாக, கமாசு அறிவித்துள்ளது. ஆனாலும், பிணைக் கைதிகளை பாதுகாப்பாக விடுவிக்க தேவையான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாக கூறியுள்ள இசுரேல் பிரதமர், விரைவில் கமாசு குழுவினருடன் உடன்பாடு எட்டுவதற்கான சாத்தியம் இருப்பதாகவும் கூறியிருக்கிறது. பிணைக் கைதிகள் விவகாரத்தில் இசுரேல் மற்றும் கமாசு குழுவினரின் மாறுபட்ட கருத்துகள் கடும் குழப்பத்தை ஏற்படுத்தி இருப்பதோடு, மருத்துவமனையில் உள்ளவர்கள் அனைவரும் உயிருடன் மீட்கப்படுவார்களா? என்ற சந்தேகத்தையும் எழுப்பியுள்ளது.
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் கனடிய உறுப்பினர்களில் ஒருவரான மதிப்பிற்குரிய தெய்வேந்திரன் தெய்வரூபன் அவர்கள் இறைவனடி சேர்ந்துள்ளார்...
இளங்கோ மாணிக் அவர்களது தாயார் திருமதி சிவபாக்கியம் மாணிக்கவாசகர் இன்று காலமானார்...
Latest updates and news